தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில்,

“மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும்.

தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் பகுதிக்குள் வராத சிங்களவர்களின் அதிகார நுகத்தடியில் தமிழர்களைச் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.

தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை கேட்டனர். ஆனால், அவர்கள் நாலாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். ஈழத்துக் காந்தி தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டனர்.

தமிழர்கள் நடத்திய அறப்போராட்டத்திற்குப் பரிசாக, துப்பாக்கிச் சூடு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை இதுதான் நடைபெற்றன.

தமிழர்கள் தொடர்ந்து வதைக்கப்பட்ட காரணத்தால், ‘சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு’ என்று வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் தீர்மானம் எடுத்தனர்.

இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா பிரகடனம் செய்தார்.

அதையொட்டித்தான் உலகில் எவரும் இதுவரை கண்டும், கேட்டும் இராத நிகரற்ற சாகசங்கள் நிறைந்த யுத்தத்தை நான் நெஞ்சல் பூசிக்கும் தலைவர் பிரபாகரன் முன்னெடுத்தார்.

உலகத்தில் தாயக விடுதலைக்காக ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஆயுத உதவிகள் கிடைத்தன.

எந்த உதவியும் இல்லாமல் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை அமைத்து ‘ஓயாத அலைகள்’, ‘அக்னி அலைகள்’ ‘யானையிரவுச் சமர்’ என்று வெற்றி மேல் வெற்றிகளை தமிழர்கள் குவித்து வந்த நேரத்தில்,

சிங்களவர்களுக்கு உலக நாடுகளின் ஆயுதங்கள் கிடைத்தன. ஆனால், தமிழர்களுக்கு எந்த ஆயுதங்களும் கிடைக்காத சூழல்.

அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச. இன்றைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, ராணுவ அமைச்சராக இருந்தபோது நடத்திய ராணுவப் படுகொலையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கிளிநொச்சியை நோக்கி வருகை தந்தனர்.

மருத்துவச் சாலைகள், பள்ளிகள் மீது சிங்களவர்கள் குண்டுகளை வீசினர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இளம்பெண்கள் நாசமாக்கிக் கொல்லப்பட்டனர்.

இப்படிப்பட்ட படுகொலைகள் நடைபெற்ற வேளையில், உலகத்தின் நீதி கிடைக்காதா? நாதி கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் மே 17, 18 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

அதற்கு நீதி வேண்டும் என்று இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகிறோம்.

அர்மீனியர்களுக்குக்கூட ஜெர்மானிய நாடாளுமன்றம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போடுகிறது.

தமிழர்கள் நாதியற்றவர்களா? எங்களுக்கு நீதி கிடையாதா? லட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 90 ஆயிரம் பெண்கள் இன்றைக்கு கணவர்களை இழந்திருக்கிறார்கள்.

மனிதகுலத்தின் நீதிமன்றமாகக் கருதுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நீதி கேட்கிறோம்.

என்ன நீதி? கொடூரமான படுகொலைகளைச் செய்த மகிந்த ராஜபக்ச கூட்டம் சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

காணாமல் போன தமிழர்கள் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட வேண்டும். சிறைப்பட்டத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழர்களின் காணிகளை, நிலங்களை அபகரித்துக்கொண்டு ராணுவத்தைக் கொண்டுபோய் குடியேற்றி இருக்கிறார்கள். அந்த நிலங்கள் மறுபடியும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும்”

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.