அரசியலில் நான் 8 மாத குழந்தை, இருந்தாலும் சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
என் கொடியும், நானும் பரபரப்பதும், பறப்பதும் மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அதை ஏன் செய்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன்.
எனினும் 30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும்.
இப்போது அரசியலில் நான் 8 மாத குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சிறுபிள்ளை என நினைத்துவிடாதீர்கள். பறக்கிறேன் மக்களுக்காக பறக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது அல்ல என் வேலை.
நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு: நான் கழுகு என்பதை மக்கள் தான் சொல்லிக் கொடுத்தார்கள். தமிழகத்திற்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.