தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், வடகரை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் மழைபெய்தது. நாராயணதேவன்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
மதுரையில் கோரிப்பாளையம், அண்ணா நகர், கே.கே.நகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனிடையே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் என்றும், வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செண்டி மீட்டரும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.