தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. இதுவரை 46,985 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் அதிகபட்சமாக 6,109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 41,710 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு எடுத்த 6,109 பேரில் புதிதாக 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,520 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தென்காசியில் தலா நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 46. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457. இன்று கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாதிப்பு: 1,520
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 17
குணமடைந்தோர் எண்ணிக்கை: 457