தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவு : 18-ம் தேதி வாக்குப்பதிவு..

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

17வது மக்களவைக்கான, பொதுத் தேர்தல் மொத்தம், 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட தேர்தல், ஏப்.11ம் தேதி நடைபெற்றது.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் நின்றவடைந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். கட்சிகளின் வேட்பாளர்களும் வீதி, வீதியாக, வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கினர்.

இதனிடையே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பரப்புரை முடிவுக்கு வந்ததை அடுத்து, ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் தொடர்பாக திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான இசை நிகழ்ச்சி, மேடை கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த தடை அமலுக்கு வந்தது.

தடையை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் அனைத்து வகை தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே இரண்டாம் கட்ட தேர்தலில்
அஸ்ஸாம் (5) , சத்தீஸ்கர் (3) , பீகார் (5) , ஜம்மு & காஷ்மீர் (2) , கர்நாடகா (14) , மகாராஷ்டிரா (10) , மணிப்பூர் (1) , ஒடிசா (5) , தமிழ்நாடு (39) , புதுச்சேரி (1) , திரிபுரா (1) , உத்தரப்பிரதேசம் (8) , மேற்கு வங்காளம் (3) ஆகிய 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளில்,

ஒடிஷா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18ம் தேதி அன்று நடைப்பெறவுள்ளதால் ,

இதற்கான பிரச்சாரமும் இன்றுடன் நிறைவடைந்தது. ஒரு புறம் இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்கு பதிவு இலக்கை எட்டும் வகையில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பதிவாகும் வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.