புதிய ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. , ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அதேபோல், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலும் ஆளுநர்உரையாற்றி வருகிறார்.
16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.
முக்கிய அம்சங்கள்
எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும் இது எனது செய்தி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை தொடங்கினார். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது .
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கும் கரோனா தடுப்பூசி போதுமானதாக இல்லை. மேலும் தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாகா இந்த அரசு செயல்படுகிறது. கொரோனாவின் 3 வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கப்படும்
கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற தேவையான சட்டங்கள் இயற்றப்படும். பெரிய நகரங்களின் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய துணை நகரங்கள் உருவாக்கப்படும். கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் உயிரிழப்புகளை தடுப்பது, தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
கிங் ஆராய்ச்சி வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.10,068 கோடி தமிழ் நாடு அரசு வழங்கியுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தபடும்.
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இவர்களை கொண்டு பொருளாதார ஆலோசனை சிறப்புக் குழு அமைக்கப்படும்!
பெரியாரின் சமூக நீதி தத்துவத்தின் அடிப்படையில் இந்த அரசு இயங்கும்
அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும் .
நோய்தொற்று குறைந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
“100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்”
“குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்”
“திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்
சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.O புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
2020ம் ஆண்டு ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்திட தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களை பயன்படுத்தி தமிழகத்தின் நீர்நிலைகள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கும் இலவச சிகிச்சைக்கு அரசு அனுமதி.