தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..

மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில்

இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரிக்கு குறுக்கே, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

அதை தொடர்ந்து, மேகதாட்டு விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், காவிரி குறுக்கே அணைகள் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கு

கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் கருத்து கூறிய பின், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.

மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தமிழகம், கேரளா உட்பட மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை அனுமதிக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாட்டு அணை குறித்து தமிழக அதிகாரிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடுவது காவிரி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.