தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் 5 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.