தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

‘தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60, 739. மேலும், 230 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,075. இதுவரை 6,095 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 690 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைக்கு புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 42. மீதியுள்ள 6 பேரில் 2 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.

மொத்தம் 738 பேரில், 679 பேர் தில்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள். இவர்களில் 7 பேர் வெளிநாட்டினர். மேலும், 344 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது ‘ என்று தெரிவித்தார்.