முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு..

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றுக் கொண்டார்.

சட்டம் ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட ஏடிஜிபிக்கள், ஐ.ஜிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் வந்த புதிய டிஜிபி ஜே.கே.திரிபாதிக்கு இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட ஜே.கே. திரிபாதியிடம், டி.கே.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய டி.கே.ராஜேந்திரன், சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி திரிபாதி, தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய அரசுக்கு நன்றி கூறிக் கொள்வதாகத் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை பராமரித்து, குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

பொறுப்பை ஒப்படைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட டி.கே.ராஜேந்திரனுக்கு அதிகாரிகள், பிரியாவிடை கொடுத்தனர்.
மலர் தூவி அவரை கெளரவித்தனர். டி.கே.ராஜேந்திரன் காரில் அமர்ந்ததும் அவரது காரை தேர் போல் அலங்கரித்து, வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் ராஜேந்திரனுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.