தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக, தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படவுள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது.