கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளன.
தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் 1459 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்காதல் தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அஜித்குமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
கடந்த 10 ஆண்டுகளில் கள்ளக்காதல் காரணமாக தமிழகத்தில் நடந்த கொலைகள் தொடர்பாகவும் இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட அளவில் குடும்ப ஆலோசனை குழுக்களை உருவாக்குவது உள்ளிட்ட 20 கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறையின் சார்பில் 20 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
அதில், கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல கள்ளக்காதல் காரணமாக கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாகவும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சமீப காலமாக கள்ளக்காதல் காரணமாக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இது திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை பாதிக்கும் சமூக பிரச்னையாக உருவெடுத்து வருவதாக எச்சரித்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் காவல்துறையினர் இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள்,
செல்போனில் ஆபாச படங்களை எளிதாக பார்க்க முடிவதால் தான் இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.