தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டியளித்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும், மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும் அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்துக்கொண்டேவருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய ஆலோசனை, மதியம் வரை நீடித்தது.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள்,
“தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்த சொல்லி இருக்கிறோம்.
ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் எங்கள் குழு பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி.
மேலும் சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர் , திருவண்ணாமலையில் பரிசோதனையை அதிகரிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாப் பகுதிகளிலும் ஊரடங்கைத் தொடர நாங்கள் வலியுறுத்தவில்லை. ஊரடங்கிலேயே எப்போதும் இருக்க முடியாது. பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கூடுகையால்தான் தொற்று அதிகமாகிறது. அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளோம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது.
பாதிப்பு அதிகரிப்பதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்