தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்த முடியாது படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் : மருத்துவ நிபுணர் குழு..

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு ஊரடங்கு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் இன்று சென்னையில் அளித்த பேட்டி:

”இன்று 19 பேர் அடங்கிய எங்கள் மருத்துவ நிபுணர் குழுவினர் முதல்வரிடம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் நிலை பற்றி ஆலோசனை நடத்தினோம்.

கடந்த 2 வாரமாக பிசிஆர் சோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக சோதனை நடப்பதால் அதிக அளவு எண்ணிக்கை வருகிறது.

ஆனால், இது அனைத்து மாவட்டங்களிலும் இல்லை. சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. பல மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது நாம் அளித்த பரிந்துரை என்னவென்றால் ஊரடங்கை அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது.

முழுவதுமாக ஊரடங்கைத் தளர்த்தும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஆனால், தொற்று நோய் குறித்த பார்வையின் அடிப்படையிலும், சுகாதார அடிப்படையிலும் சில ஆலோசனைகளை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம்.

அந்த ஆலோசனையை வைத்து எங்கு ஊரடங்கைத் தளர்த்துவது, எங்கு தொடர்வது என்பது குறித்து நாங்கள் அளித்த வழிகாட்டுதல் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும்.

தரவுகளை வைத்து தளர்வு குறித்து அரசு முடிவெடுக்கும். ஆனால் ஊரடங்கைத் தளர்த்தினாலும், முழுவதுமாக நிச்சயம் தளர்த்த முடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

அப்படியே செய்தாலும் சில நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

சமூக விலகல் முக்கியம். கைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பொது இடத்தில் இருக்கும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நம்முடைய வாழ்க்கை முறையையே மாற்றவேண்டும். ஏனென்றால் இந்த வைரஸ் நம்முடன் கொஞ்ச நாள் அல்ல, நம்முடன் நிறைய நாள் இருக்கப் போகிறது.

அதனால் நாம் கடைப்பிடிப்பதை ஒருநாள், இரண்டு நாள் கடைப்பிடிக்க முடியாது. தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும்.

வயதானவர்களை எச்சரிக்கையாகப் பராமரிக்க வேண்டும். இளையோர் அவர்களிடம் அதிகம் நெருங்கிப் பழகக்கூடாது. முதியோரைப் பாதுகாக்க வேண்டும்.

அதேபோன்று கேன்சர், கிட்னி பிரச்சினை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் சரியான சிகிச்சை எடுத்துவரவேண்டும். அதனால் அச்சுறுத்தல் குறையும்.

சில நடைமுறைகளை நாம் தற்சமயம் அனுமதிக்கவே முடியாது. அது ஒரு இடத்தில் கும்பலாகக் கூடுவதை அனுமதிக்க வாய்ப்பே இல்லை.

நீண்டகாலப் பிரச்சினை உள்ளதால் ஒரே நேரத்தில் ஒரே வகையான தீர்மானமான முடிவு எடுக்க வாய்ப்பில்லை. ஆனால், சுகாதார நடைமுறைகளைத் தொடரவேண்டும்.

பெருவாரியான சோதனை, தொற்றுள்ளவர்களைக் கண்டறிவது, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் சமுதாய ஆதரவும் தொடர்ச்சியாகத் தேவை. நாம் அனைவரும் சேர்ந்துதான் இந்த நோயை வெல்ல முடியும்”.

இவ்வாறு பிரதீப் கவுர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று…

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..

Recent Posts