தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; அது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, நவம்பர் 9ஆம் தேதியான இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரையிலும், மேலும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரையும், மேலும் சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் நாளை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10,11 ஆகிய இரண்டு நாட்களும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 12ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மறுநாள் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை..

திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

Recent Posts