தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி கட்டணங்களை வசூலிக்க தடை..

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், அப்பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய அனுமதியின்றி கட்டணம் வசூலிப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிப்பதை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

எவ்வித அனுமதியுமின்றி நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் ஆகியவற்றை வசூலிப்பவர்களை கண்காணித்து, அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி, நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் கோவில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் மற்றும் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.