தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் 253 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 27,416. தமிழகத்தில் புதிதாக இரண்டு ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவரை 5,305 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தில்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் எண்ணிக்கை 63. மற்ற மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இது தவிர்த்து உள்ள மற்ற மூன்று பேரில் ஒருவர் வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டுள்ளார், மற்றொருவர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டவருடன் தொடர்பில் இருந்துள்ளார்,

மற்றொருவருக்கு தொற்று ஏற்பட்டதன் காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.” என்றார்.

இது தவிர்த்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெண் ஒருவர் இன்று பலியாகியுள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.