தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.