முக்கிய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன “தமிழக வேலை தமிழருக்கே”: திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு மறியல் (வீடியோ)

“தமிழக வேலை தமிழருக்கே” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன் கூறியதாவது:

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வடநாட்டவர்களே அதிகம் பணியமர்த்தப்படுகின்றனர். இதைத் தடுக்கவே இன்று வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இது இத்துடன் நிற்காது. வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வருவோரை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மறித்து திரும்பிப் போகுமாறு கேட்டுக் கொள்ளும் போராட்டத்தையும் விரைவில் நடத்த இருக்கிறோம். வன்முறை எதுவுமின்றி, தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்துடன் எங்களது போராட்டம் விரிவு படுத்தப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils என்ற முழக்கம் ஹேஸ்டேக்குடன் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளி மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துகளை பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரண்டாக்கினர்..