முக்கிய செய்திகள்

‘தமிழ்படம் 2.O’ போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்பு..


நாயகன் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘தமிழ்படம் 2.O’ படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு நாளை (டிசம்பர் 11) சென்னையில் தொடங்கவுள்ளது. இன்று(டிசம்பர் 10) இப்படத்தின் நாயகன் சிவா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிவா பிறந்த நாளை முன்வைத்து, ‘தமிழ்படம் 2.O’ படக்குழு, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏனென்றால், ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது. அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

முன்னதாக மே 25-ம் தேதி பட வெளியீடு என்றும், மே 26-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியீடு என்றும் படத்தின் போஸ்டரில் குறிப்பிட்டு வெளியிட்டார்கள். மேலும், ஆன்லைன் திருட்டு பங்குதாரர் (Online Piracy Partner) என்று தமிழ் ராக்கர்ஸ் லோகோ போட்டுள்ளார்கள். இதற்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘தமிழ் படம்’ திரையுலகில் வெளியான முன்னணி படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து எடுத்த படமாகும். அதன் 2-ம் பாகத்தின் போஸ்டர் வடிவமைப்பிலேயே படக்குழு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.