திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியில் தான் இந்த கொடுமையான நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது..!
நடுநிலைப் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்த ஆசிரியையின் கணவர் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது வீட்டு குளியலறையின் வெண்டிலேசன் ஜன்னலின் வெளிப்புறமானது ஒதுக்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அந்த ஆசிரியை குளித்துக் கொண்டிருக்கும் போது வெண்டிலேசன் ஜன்னல் கண்ணாடியில் ஒரு கை தெரிந்துள்ளது.
இதை பார்த்து ஆசிரியை சத்தமிட்டதால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
அது பக்கத்து வீட்டில் வசிக்கின்ற 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின்வேலையாக இருக்கலாம் என்று எண்ணி அவனது பெற்றோரை அழைத்து எச்சரித்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து ஆசிரியை அங்கங்களை வர்ணித்தும், உடலில் எந்தெந்த இடத்தில் மச்சம் உள்ளது என்று குறிப்பிட்டும்,
இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை முக நூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு விடுவோம் என்று எச்சரித்தும் துண்டு சீட்டு ஒன்றை ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றனர்.
இதனால் மிரண்டு போன ஆசிரியை, தனது கணவரிடம் தெரிவிக்க நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அவர்கள் இருவரும், வையம்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் அந்த மிரட்டல் கடிதத்தையும் சந்தேகத்துக்கு இடமான பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அவை இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.
இதையடுத்து அந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் படிக்கின்ற மேலும் 2 மாணவர்களும் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை திருட்டு தனமாக பார்த்து ரசித்ததாகவும், ஒரு கட்டத்தில் செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் தெரிவித்தான்.
குரூர புத்தி கொண்ட அந்த 3 மாணவர்களையும் கைது செய்த காவல்துறையினர் அந்த மாணவர்களிடம் இருந்து செல்போன்களையும், ஆசிரியையின் வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர்.
சொந்த வீடாக இருந்தாலும், உறவினர் வீடாக இருந்தாலும் பெண்கள் குளியல் அறைக்குள் சென்றதும் அங்கு சந்தேகத்து கிடமான எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளனவா..?
வெண்டிலேசன் ஜன்னல் பாதுகாப்பாக இருக்கின்றதா..? நம்மை படம் பிடிக்க ரகசிய கேமராக்கள் ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா ?
என்பதை ஆய்வு செய்த பின்னர் குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை ஒன்றே இது போன்ற விபரீத எண்ணம் கொண்ட பாதகர்களிடம் இருந்து பெண்களை காக்கும் என்கின்றனர்.