ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு வரை இங்கே தமிழை அறியாமலேயே படித்து முடித்து விடலாம். அப்படிப் படித்த தலைமுறையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தான் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதோ நமது அண்டை மாநிலமான தெலங்கானா விழித்துக் கொண்டது. அங்கு, முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ என அனைத்து பள்ளிகளுக்கும் இதுபொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எடுத்துள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வரும் கல்வித்துறை பொறுப்பாளருமான கே.ஸ்ரீஹரி ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ”இதை அமல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.
தெலுங்கு படித்திருக்காத மாணவர்களும் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் படிக்கும் வகையில் தெலுங்கு பாடம் அமைய வேண்டும். அத்துடன் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் எளிதாக மதிப்பெண் பெறும் வகையிலும் பாடத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும்” என்று அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அதிகாரிகள், ”தெலங்கானாவில் 1,370 பள்ளிகளில் தெலுங்கு இன்றி மற்ற பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும்.
மாநில அரசின் முடிவு குறித்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுடன் விவாதிக்கப்பட்டது. அவர்கள் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அப்பள்ளிகளில் உள்ளூர் மொழியைக் கட்டாயப் பாடமாக்க சில வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலான இடங்களில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை ”என்றனர்.
தமிழகத்தில் தமிழர்கள் வாழ வேண்டும் என்றால், இதுபோன்ற நடவடிக்கையினை இங்கும் எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் என்ற ஒரு பகுதி இருந்ததாக ஏதோ ஒரு மொழியில் சிலர் எதிர்காலத்தில் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான். வரைபடம் கூட மிஞ்சாது.
என்ன செய்யப் போகிறது தமிழகம்?
Telangana annouced Telugu Mandatory From Class I to 10 in Schools