தெலுங்கானாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் திட்டம்..

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

தெலுங்கானா சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து, சூசகமான தகவலை சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் கொங்கர காலனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி அறிக்கையை சமர்பித்தார்.

அதில் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து மாநிலத்தின் வளர்ச்சி எப்படி இருந்தது. பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, அரசு எப்படி வெற்றிகளைக் குவித்தது என்று விளக்கினார்.

பின்னர் பேசிய அவர், விரைவில் தேர்தல் அறிக்கைக் குழு ஒன்றை அமைக்க உள்ளேன். அதில் பல்வேறு புதிய கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கும் என்றார்.

முரண்பாடாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்காமல், கட்சி தேர்தல் அறிக்கையில் அனைத்தும் இடம்பெற்றிருக்கும் என்று உறுதியளித்தார்.

ஊடகங்கள் அளித்த தகவலின்படி, மாநில அரசை கலைக்க சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முன்னதாக தான் எடுக்கும் எந்தவொரு முடிவும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே. விரைவில் முக்கிய முடிவு ஒன்றை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.

தெலுங்கானாவிற்கு அளப்பறிய மாநில அதிகாரம் பெற்று தந்துள்ளாகவும், ஏராளமான வெற்று நிலங்களை விளை நிலங்களாக மாற்றி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதைப் போல், ஒரு கோடி ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் அளிக்கும் வசதி விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

குழாய்கள் மூலம் 20,000 கிராமங்களுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13,000 கிராமங்களுக்கு வரும் நவம்பருக்குள் குடிநீர் வசதி அளிக்கப்படும் என்றார்.