கோவில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வி.முத்துசாமி என்பவர் கோவில் நிலம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; ‘திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள சங்கரநாராயணர் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதில், 17 ஏக்கர் 62 செண்ட் விவசாய நிலத்தை சாகுல் அமீது என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அவரிடம் இருந்து 14 பேர் அந்த நிலத்தை சட்டவிரோதமாக வாங்கி, அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக மிகக் குறைந்த குத்தகை தொகையை வழங்கி வருகின்றனர். எனவே, இந்த விவசாய நிலத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து எதிர்தரப்பினர் கூறுகையில், சட்டப்படிதான் இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். மனுதாரர் எங்கள் ஊரில் உள்ள குளத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால், ஏற்பட்ட பகையினால், எங்களை பழிவாங்க இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்’ என்று கூறியிருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பிறப்பித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:- பழிவாங்கும் நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினாலும், அரசின் நிலத்தை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமையாகும். அதேபோல, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும்.

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை முறையாக பராமரித்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். கோவில் சொத்துகளை குத்தகைக்கு, வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் வாடகை பாக்கி, குத்தகை பாக்கி வைத்திருந்தால், அவற்றை 4 வாரத்துக்குள் செலுத்திவிடவேண்டும் என்று பத்திரிகைகளில் இந்து சமய அறநிலையத்துறை விளம்பரம் செய்ய வேண்டும்.

அதன்பின்னரும், பாக்கித் தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த நபர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடப்பட்ட கோவில் சொத்துகள் விவரங்களை 6 வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதை அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை அவர் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை தடை செய்ய பாக்., அவசரச் சட்டம்..

Recent Posts