பொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நீடிப்பதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் 2 பேர் பேசிக் கொள்வது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவிய விவகாரத்தால், அந்த சமூகத்தினர் மத்தியில் கொதிப்பு நிலவுகிறது.

பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று போராட்டங்களும், போலீசார் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

அந்த சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுடன் காவல்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு காரணமான வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்டவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இருப்பினும் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே நீறுபூத்த நெருப்பாக கோபம் நிலவி வருவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க, பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில், அடையாளம் தெரியாத ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சில பகுதிகளில் ஆங்காங்கே மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டுள்ளதாலும், போராட்டங்களின்போது வன்முறை நிகழக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன