தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு தைப்பூச திருநாளையொட்டி பக்தர்கள் தமிழகம் முழுவதும் நடைபயணமாக வந்து தரிசனம் செய்கின்றனர்.
சுமார் 400 வருடங்களாக செட்டிநாடு பகுதியில் உள்ள நகரத்தார் இன மக்கள் காவடி எடுத்து நடைப்பயணமாக சென்று பழநி முருகனை தரிசித்து வருகின்றனர்.இந்த வருட தைப்பூச திருவிழாவிற்காக
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் இருந்து மாட்டு வண்டியில் ‘ரத்தினவேல்’ முன்னே செல்ல 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநிக்கு புறப்பட்டுச் சென்றது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆண்டுதோறும் காவடியுடன் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவர்களுடன் கூண்டுகட்டிய மாட்டு வண்டியில் ‘ரத்தினவேல்’ எடுத்துச் செல்லப்படும்.
இந்த காவடி யாத்திரை 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட தினத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நகரத்தார் சமூகத்தினர் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஒன்று சேருவர். பின்னர் அங்கிருந்து பழநி புறப்படுவர்.
இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் 300-க்கும் மேற்பட்ட நகரத்தார் சமூகத்தினர் பிப்.1-ம் தேதி குன்றக்குடி வந்தனர்.
அங்கு ரத்தினவேலுக்கு சிறப்புப் பூஜை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார், மயில் காவடி எடுத்து குன்றக்குடி கோயிலில் இருந்து புறப்பட்டனர்.
காவடிக்கு முன் வரிசையில் மாட்டு வண்டியில் ரத்தினவேல் எடுத்துச் செல்லப்பட்டது.
பாதயாத்திரையின்போது ஒவ்வொரு நாள் இரவிலும் சிறப்புப் பூஜை நடைபெறும். பிப். 7-ம் தேதி பாதயாத்திரைக் குழு பழநி சென்றடையும். பிப். 8-ம் தேதி தைப்பூச திருவிழாவில் பங்கேற்பர்.
இதைத் தொடர்ந்து பிப்.10-ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.13-ம் சந்தனக்குழம்பு அபிஷேகம் முடித்து, பிப். 14-ம் தேதி மீண்டும் நடந்தே ஊருக்கு திரும்புவர்..