தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போல் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணி அளவில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
7 திரைகளை விலக்கி காட்டப்பட்ட இந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.
பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதாயாத்திரையாக மக்கள் நடந்து வந்து தரிசனம் செய்கின்றனர். சண்முகா நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீடாடி வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து,
வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்கின்றனர்.
பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே குடுபத்துடன் வந்திருந்த பக்தர்கள்
நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பால்குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும் முருகனை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இருந்து அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசித்தனர்.
நெல்லை மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் சிவசிவ கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை இழுத்தனர்.
கிழக்கு ராஜவீதியில் தொடங்கி, தெற்குராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று மாலை மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசித்தனர்.