தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

___________________________________________________________________________

meyynadavarjuly1-15பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  ஸ்ரீ ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களை படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

____________________________________________________________________________

தலைவி தோழியிடம் கூறும் கூற்று

 

51ம் பாடல் – சுடர்த்தொடீஇ கேளாய்…   துறை விளக்கம்sankailakkiyam11.6e   தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால்தான் புகுதற்குத் தகுயல்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனை தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல். புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல்.   பகாஅ விருந்து : ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி) ஏற்றுக் கொள்கிறாள்.   இந்நிகழ்ச்சி ஒரு திரைப்படம் போல விரிகிறது. இப்பாடற் பொருளைக் காண்போம்.   தலைவி தோழியிடம் பின் வருமாறு இக்காட்சியை விளக்குகிறாள்.   ஒளிமிக்க வளையல் அணிந்த தோழி. ஒளிமிக்க வளையல் அணிந்த தோழி நான் சொல்வதைக் கேள். தெருவில் நாம் மணலால் செய்த சிறுவீட்டைத் தன்காலால் கலைத்தும் நாம் கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக் கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாக கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வீட்டில் இருந்த போது வந்தான். வீட்டின் வாசலில் இவ்வாறு குரல் கொடுத்தான். “வீட்டில் இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண விரும்பினேன். (குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டல்) என்றான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என்தாய், என்னிடம் விளங்கும் ஒளி வீசும் அணி (நகை முதலிய ஆபரணம்)யை அணிந்தவளே. உண்ணத் தகுதியான நீரைத் தகட்கும் பொன்னால் ஆன கலத்தில் (தங்கத்தாலான குவளை அல்லது செம்பு (குடுவை)) கொண்டுபோய்க் கொடுத்து வா என்றாள். அவ்வாறு தாய் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ணீர் கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன்கையைப் பிடித்து (கையைப் பிடித்து இழுத்தான்) வருத்தினான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப் பொருள். வாப்பட்டி என்பது வாப்பட்டி என வாயாடும் பெண்களை அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த செயலைப் பார்த்தாயா?“ என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள்.   நான் அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல் எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக் கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள். முதுகின் பக்கம் நின்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் தாய் என நச்சினார்க்கினியார் கூறுவார். அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான். இது அற்புதமான திரைப்படக் காதல் காட்சிபோல் உள்ளது. இந்தப் பாடலுக்கு “நகைக்கூட்டம் செய்தான் கள்வன் மகன்” எனத் தலைப்பிட்டுள்ளார் இக்கால உரையாசிரியர் அ.மாணிக்கம்.

 

இத்தகைய சுவையான காட்சியைச் சித்தரிக்கும் அந்தப் பாடலைக் காண்போம்: (பாடல் எண் – 51)

 

“சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்       thamizhrivom1.7a       

மணற் சிற்றில் காலின்     சிதையா, அடைச்சிய            

கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி                    

நோதக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர்நாள்                             

அன்னையும் யானும் இருந்தேமா”, இல்லிரே,          

  “உண்ணுநீர் வேட்டேன்” என வந்தாற்கு, அன்னை             

அடர் பொற் சிரகத்தா வாக்கி, சுடரிழாய்                

உண்ணுநீர் ஊட்டி வா” என்றாள், என யானும்           

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை     

வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு             

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா         

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்                    

உண்ணு நீர் விக்கினான் என்றேனனோ, அன்னையும்         

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்              

கடைக் கணால் கொல்வான் போல் நோக்கி

நகைக் கூட்டம்    செய்தான் அக் கள்வன் மகன்!!            

 

பாடல் குறித்து சில குறிப்புகள்:   பொற்சிகரம் – பொற்கலம் : இதனால் தலைவியின் செல்வச் செழிப்பும், தாயின் விருந்தோம்பும் அறப்பண்பும் விளங்கும்.   யானும் வாக்கி – வார்த்து (தண்ணீர் வார்த்தல்), யானும் தன்னை அறியாது சென்றேன் என்பது யானும் அவன் சிறுபட்டி என்பதை அறியாமல் சென்றேன் எனவும், யானும் அவனது குரல் கேட்டதால் மெய்மறந்து மயங்கிச் சென்றேன் எனவும் இருபொருள் பட நின்றது.   நகைக்கூட்டம் : தன்புன்முறுவலால் என் உள்ளத்தில் புகுந்து என்னோடு இணைந்தான் (உள்ளத்தால் புணர்வது உள்ளப் புணர்ச்சி என்பதை உணர்த்தும் நகைக் கூட்டம்) நகை – மகிழ்ச்சி புன்முறுவல், கூட்டம் – புணர்ச்சி, மனம் இணைந்த காதலர் இருவர் வாழ்வு, நகைக் கூட்டம் – மகிழ்ச்சிக்குரிய சந்திப்பு என்றும் கொள்ளலாம்.     தோழியிடம் தானும் தலைவன் உள்ளத்தில் நுழைந்துவிட்டேன் எனக் குறிப்பிடுகிறாள். “ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்” என இராமனும் சீதையும் சந்தித்த காட்சியைக் கம்பர் நினைவூட்டுவது இங்கே நினைக்கத்தக்கது. சேர்ந்து இல்லறத்தில் வாழ்வதாகிய புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகிய மலைநில வாழ்வு பற்றிய சான்றைக் கண்டோம்.   –    தொடர்ந்து தமிழறிவோம்.

 

Thamizharivom – Kalithokai (4) : Pulavar Aru.Mey. Meyyandavar

__________________________________________________________________________________________________________

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! – ரவிக்குமார்

தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

Recent Posts