தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 1 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

Thamizharivom – Pathitrupathu 1

__________________________________________________________________________

meyyandavan 4பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  தவத்திரு மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களை படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

____________________________________________________________________________________________________

சங்க இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் தமிழறிவோம் பகுதியில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிச் சுருக்கமாக அறிந்து வருகிறோம்.  இதுவரை அகநூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை பற்றியும், அகப்புற நூலாகிய பரிபாடல் பற்றியும் அறிந்தோம். இனி , அக்கால மன்னர்களின் வீரம், கல்வி, கொடைச்சிறப்பு பற்றிய புறச்செயல்களை விளக்கும் பதிற்றுப் பத்து பற்றியும், புறநானூறு பற்றியும் அறிய உள்ளோம். முதலில் பதிற்றுப்பத்து பற்றி அறிவோம். சேர மன்னர்களின் அளப்பரிய வீரம், போர்ச்சிறப்பு பற்றிய செய்திகளைப் பதிற்றுப் பத்து விளக்குகிறது.pathitrupathu7.3.16

 

பதிற்றுப் பத்து – சில விளக்கங்கள்

 

பது + இற்று = பதிற்றுப் பத்து ஆகும். பது பத்து எனும் எண்ணைக் குறிக்கும். ஐந்து + பத்து – ஐம்பது, ஆறு + பத்து = அறுபது, ஏழு + பத்து = எழுபது, எட்டு + பத்து = எண்பது என வருவதை அறிவோம். இறுதியில் பத்து என்பது, இடையில் உள்ள “த்” குறைந்து பது என வந்தது. இதை இடைக்குறை விகாரம் என்போர் சான்றோர்.

 

பது + இற்று + பத்து = பது + இற்று + பத்து = பதிற்றுப்பத்து என வருகிறது. இங்கே இற்று என்பது சாரியை ஆகும். ஆக, 10X10 = நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.

 

புறத்திணை நூல்களுள் இது புறநானூற்றுக்கு முந்தையது எனச் சான்றோர் கருதுகின்றனர். புறத்திணை நூல்கள் இரண்டு. முதலில் வருவது பதிற்றுப் பத்து, இரண்டாவது வருவது புறநானூறு ஆகும்.

 

பதிற்றுப் பத்துகளில் எட்டுப்பத்துகள்தாம் நமக்குக் கிடைத்துள்ளன. அதாவது எண்பது பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.

 

நூல் எழுதப்பட்ட காலத்தில் தமிழர் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நூலுக்குள் புகுமுன் அறிவோம். சங்ககாலத்தில் வைதீக சமயம் அவ்வளவாகக் காலூன்றவில்லை. புராண, இதிகாசச் செய்திகள் எல்லோருக்கும் தெரியவில்லை. கள்ளுண்டல், இறைச்சி உண்ணுதல், பல பெண்களை மணத்தல் ஆகியவை குற்றமாகக் கருதப்படவில்லை. பரத்தையர் வாழ்க்கை கண்டிக்கப்படவில்லை. சங்ககாலத்துக்குப் பின் எழுந்த (கி.பி 2 ஆம் நூற்றாண்டில்) திருக்குறள் அறவாழ்க்கையை வற்புறுத்தியது. கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, வரைவின் மகளிர் முதலிய அதிகாரங்களில் ஒழுக்க முறையை வலியுறுத்தினார் வள்ளுவர்.

 

கபிலர், அவ்வையார், முதலிய புலவர்கள் எழுதிய சங்கப்பாடல்களில் மன்னன்தானும் கள் உண்டு, புலவர் முதலாயினோர்க்கும் அதை அருந்தக் கொடுத்தான் என்றும், புலால் உணவை எல்லோரும் விரும்பி உண்டனர் என்றும் காண்கின்றோம்.

 

இதற்கு மாற்றுச் சிந்தனைகளை, அறத்தின்  ஆழ, அகலங்களைக் கடைச்சங்க காலத்தின் கடைப்பகுதியில் தோன்றிய வான்புகழ் வள்ளுவன் படைத்த திருக்குறள் காட்டியதை மேலே சுட்டினோம். அதே போலச் சங்கம் மருவிய கால நூலான மணிமேகலையும் ஒழுக்க முறைகளை உரைக்கிறது.

 

சங்ககால மன்னர்கள் போரிலேயே தம் காலத்தில் பெரும் பொழுதைச் செலவிட்டனர் என்பதும், ஒரு சில புலவர்கள் மன்னர்களை நல்வழிப்படுத்திக் குடிமக்களை நன்கு ஆதரிக்கச் செய்தனர் என்பதும் புலனாகின்றன. தம்முடன் மாறுபட்ட (பகை) மன்னர்களை அழிப்பதும், அவர்கள் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துவதும், அங்கு கவர்ந்த அணிகலன்களைத் தம் வீரர்களுக்கும், குடிமக்களுக்கும் தானமாககக் கொடுப்பதும் பெருவழக்காய் இருந்தன. காதல், வீரம், கொடை இவை மூன்றுமே சங்ககாலத்தமிழ் வாழ்வின் இன்றியமையா வாழ்க்கை முறையாக இருந்துள்ளன.

 

சில இன்றியமையா உண்மைகளையும் சங்ககாலப் புலவர்கள் வாயிலாக அறிய முடிகின்றது. சங்கப்புலவர்கள் உண்மைச் செய்திகளையே பாடல்களில் வடித்தனர். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறும் பழக்கம் பண்டைத் தமிழ்ப் புலவர்களிடம் காணப்படாத இயல்பாகும். ஆகவே, இந்நூலுள் ஆங்காங்கே கூறப்பட்ட செய்தியும் உண்மையென்றே எடுத்துக் கொள்ளலாம்.

 

இனி, நூலின் முறைபற்றி அறிவோம். பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள எட்டுப்பத்துகளையும் எட்டுப்புலவர்களும் பாடியுள்ளனர். பதிற்றுப் பத்து நூலைத் தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை. கிடைத்துள்ள எண்பது பாடல்களிலும் சிறந்த சொற்றொடரை எடுத்துப் பாட்டின் தலைப்பாக வைத்துள்ளனர்.

– தொடர்ந்து அறிவோம்

__________________________________________________________________________________________________________