முக்கிய செய்திகள்

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து -6 : புலவர் ஆறு. மெ. மெய்யாண்டவர்

Thamizharivom – Pathitrupathu – 6

____________________________________________________________________________________________

பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  தவத்திருmeyyandav 5மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

______________________________________________________________________________________________________

குமட்டூர்கண்ணனின் 2ஆம் பத்தில் 14ஆம் பாடல் சான்றோர் மெய்மறை என்னும் தலைப்பில் பாடியுள்ளார்,

 

திணை; பாடாண்திணை

 

துரற; செந்துறைப் பாடாண்பாட்டு

 

வண்ணம்; ஒழுகுவண்ணமும், சொற்சீர் வண்ணமும்

 

தூக்கு; செந்தூக்கு. பெயர்; சான்றோர் மெய்ம்மறை

 

வண்ணம்; ஒழுகுவண்ணம் முன்பு விளக்கப்பட்டது.

 

சொற்சீர் வண்ணம்;- சொற்சீர் வண்ணம் சொற்சீர் அடியை உடையது, சொற்சீர் அடி என்பது அளவடியில் குறைந்தும் வஞ்சி ஓசை இல்லாமல் அகவல் ஓசை பெற்றும் வருவது.

 

பெயர்க்காரணம் : சேரலாதன் தன்படை மறவரை, மெய்யில் இடும் கவசம்போல் காப்பவன் என்று கூறிய தால் “சான்றோர் மெய்ம்மறை” எனும் பெயர் பெற்றது, சான்றோர்; படை வீரர், இப்பாட்டின் துறை “வாழ்த்தியல்” என உரையாகியர் நக்கினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்பாடல் இதோthamizhrivom pathitru pathu 6

 

பாடல் எண் – 14

 

சான்றோர் மெய்ம்மறை நில நீர் வளி

விசும்பு என்ற நான்கின் அளப்பரியையே

நாள்கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை
போர்தலை மிகுத்த ஈரைம் பதின்மரொடு
துப்புத் துறைபோகிய துணிவுடை ஆண்மை
அக்குரல் அனைய கைவண்மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீடு அழித்த செருப்புகழ் முன்ப !
கூற்று வெகுண்டு வரினும்  மாற்றும் ஆற்றலையே
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
வான்உறை மகளிர்,  நலன், இகல்கொள்ளும்
வயங்குஇழை கரந்த, வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படைஏர் உழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பின்இப் பொழில்முழுது ஆண்டநின்
முன்திணை முதல்வர் போல, நின்றுநீ
கெடாஅ நல்இசை நிலைஇத்
தவாஅ லியரோ இவ்உலகமோடு உடனே.

 

இப்பாடலின் பொருள்

 

1-4. மன்ன! (சேரலதன்) நிலம், நீர், காற்று, விசும்பு (ஆகாயம்) என்ற நான்கையும் போன்று நீ உன் பெருமையை அளந்து காண்பதற்கு அரியவன் ஆவாய்.

 

(5-7) துரியோதனன் முதலான கௌரவர் நூறுபேர்க்கும் போரில் துணை புரிந்த ஆண்மை நிறைந்த அக்குரன் என்ற அஞ்சாமைகொணட வீரனைப் போன்ற கொடைத்தன்மையுடையவன் நீ.

 

(8-10) போரில் வஞ்சனையின்றிப் போரிட்டுச்சிறந்த தும்பைப்பூ அணிந்து போரிடும் பகைவரின் போர் ஆற்றலையும் வென்றவன் நீ, போரை விரும்பும் வலிமை படைத்தவன் நீ, இயமனே (எமதர்மன்) கோபம் கொண்டு உயிர் பறிக்கும் எண்ணத்தில் போர் புரிய வந்தாலும் அவனையும் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் ஆற்றல் உடையவன் நீ.

 

(11-12) பகைமன்னவர் எழுவரின் முடிகளின் பொன்னால் ஆன மாலையணிந்த பரந்த மார்பையும் வலிமை பொருந்திய பெரியகைகளையும் உடையவனே! வீரர்கட்கும் கவசம் போன்றவனே! விண்ணுலகத்துத் தெய்வ மகளிர் போன்ற அழகினையும் தலையணி அணிந்த வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலினையும் வளைந்த காதணிகளையும் (தோடு முதலியன) உடைய அரச மாதேவியின் கணவனே.

 

(16-17) பல யானை கூட்டத்துடன் வெல்லும் கொடி உயர்ந்து அசையும் படையை ஏராகக் கொண்டு(கலப்பை) பகைவரின் பகையாகிய நிலத்தை உழுகின்ற உழவனே. பாண் மகளிராகிய விறலியர்க்கு வேண்டிய பரிசளிக்கும் மன்னவனே!

 

(18-22) விளங்கும் மணிகள் செறிந்த பொன்னால் ஆன அணிகளைப் பூண்டவனே, நீ கடல்சூழ்ந்த இந்நில உலகத்தே உள்ள தமிழகம் முழுவதையும் முன்னோர்களைப் போல நிலைபெற இருந்து அரசாணையைச் செலுத்தி ஆட்சி செய்து அழியாப் புகழ் பெற்று அப்புகழ்நிலை பெறும் வண்ணம் பன்னெடுநாள் வாழ்வாயாக என வாழ்த்துகிறார்.

 

அரும்பொருள் விளக்கம்;

 

சேரலாதன் மிகுந்த பெருமையுடையவன் ஆதலால் நிலம், நீர், காற்று,வானம் எனும் நான்கின் வலியை உடையவன் என் வாழ்த்துகிறார்.

 

விளக்கம்; ஒளி ஈரைம்பதின்மர்: இரண்டு + அம்பதின்பர்

 

நூற்றுவர்: கௌரவர்

 

அக்குரன் பாரதத்தில் சொல்லப்படுபவன், தலையேழு வள்ளல்களுள் ஒருவன், இவனைக் கருணன் எனக் கருதுவாகும் உளர், பாரி, ஓரி, காரி,ஆய், அண்டிரள், அதியமான் போன்றவர் கடை ஏழு வள்ளல்கள் ஆவர் இவர்கட்கு முற்பட்டு விளங்கியவர் தலையேழு வள்ளல்கள் ஆவர்.

 

 

___________________________________________________________________________________________________