முக்கிய செய்திகள்

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 4 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

 

Thamizharivom – Patitru pathu 4

____________________________________________________________________________________________

பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  தவத்திருmeyyandav 5மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

____________________________________________________________________________________________

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 4

 

பதிற்றுப்பத்து பாடல்கள் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பிற்காலத்தில் எழுதப்பெற்ற பதிகம் உள்ளது. இப்பதிகங்களின் வாயிலாக, பாடிய புலவர், பாடப்பெற்றவர், பாடியவர் பெற்ற பரிசல்களும் அச்சேர மன்னர்கள் ஆட்சி செய்த ஆண்டுகளையும் அறிய முடிகிறது.

அத்துடன் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம் தூக்கு போன்றவை தரப்பெற்றுள்ளன. தூக்கு என்பது செய்யுளைக் குறிக்கும் சொல். பண்டைக் காலத்தில் புலவர்கள் தம் கவிதைகளைப் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் எழுதிச் சுமந்து (தூக்கிச்) சென்றனர் அதனால் செய்யுள் வகை தூக்கு என அழைக்கப்படுகிறது.வண்ணம் என்பது இசையைக் குறிக்கும். இதைத் தொல்காப்பியர் தம் செய்யுளியலில் குறிக்கிறார். மொத்தம் 20 வண்ணங்கள் உள்ளன.

வண்ணம் தானே நாலைந்தென்ப – 1468 ஆம் நூற்பா

என மேற்கூறிய நூற்பாவால் வண்ணம் பற்றிக் குறிப்பிடுகிறார். வண்ணங்கள் இருபதின் பெயர்கள் பின்வருமாறு.

  1. பாஅ வண்ணம், 2. தாஅ வண்ணம், 3. வல்லிசை வண்ணம், 5.இயைபு வண்ணம், 6.அளபெடை வண்ணம், 7. நெடுஞ்சீர் வண்ணம், 8.குறுஞ்சீர் வண்ணம், 9. சித்திர வண்ணம், 10.நலிபு வண்ணம், 11.அகப்பாட்டுவண்ணம், 12. புறப்பாட்டு வண்ணம், 13. ஒழுகு வண்ணம், 14. ஒரூ வண்ணம், 15. எண்ணு வண்ணம், 16. அகைப்பு வண்ணம், 17. தூங்கல் வண்ணம், 18. ஏந்தல் வண்ணம், 19. உருட்டு வண்ணம், 20. முடுகு வண்ணம்

இப்படி, பதிற்றுப்பத்து நூலைப் பல்வேறு புலவர்கள், செய்யுள் அமைப்பும் இசை வடிவும் தெற்றென அமைத்துப் பாடி உள்ளனர். பதிற்றுப் பத்துப் பாடல்கள் சொற் சிறப்பும் பொருட் சிறப்பும் உடையனவாகும். வல்லிசை வண்ணம் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டு. மெல்லிசை வண்ணம் பி.பி.சீனிவாஸ், ஏ.எம்.ராஜா பாடியவை. தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியன், உன்னிகிருஷ்ணன், கே.ஜே.ஜேசுதாஸ் போன்றோர் பாடும் பாடல்களும் அவ்வகையைச் சார்ந்தவையே.

முதலில் குட்டூர்க் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்துப்பாடலைப் பார்ப்போம்.

இதற்கு முன்னுரையாக இரண்டாம் பத்து பதிகம் அமைந்துள்ளது. அப்பாடலையும், அதற்கான பொருளையும் பார்ப்போம்.

பொருள்:

உதியன் சேரலாதன் நிலையான பெரும்புகழை உடையவன், செம்மையான நல்லாட்சி புரிபவன், இனிமையாய் இசைக்கும் வெற்றி முரசை உடையவன் அவனுக்கு வேளிர் குடியில் வந்து பிறந்து அவனை மணந்து கோப்பெருந்தேவியாகவும் விளங்கியவள் வேண்மாள் நல்லினிதேவி அவளுக்கும் உதியஞ்சேரலாதனுக்கும் பிறந்த மகன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்.

இவன், அருவிகள் கொட்டும் இமயமலையில் தன் வில் இலச்சினையைப் பொறுத்தவன். கடலை வேலியாகக் கொண்ட தமிழகத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவும் வண்ணம் நல்லாட்சி செய்தவன். தன் சேரர் குடிக்கே உரித்தான போர்ச்சிறப்போடு சென்று ஆரிய மன்னரைக் களத்தில் வெற்றி கண்டு அவரைத் தமக்குப் பணியச் செய்தவன்.

தன்னை எதிர்த்த யவனரை வென்று அவரைச் சிறைப்பிடித்தவன். அவருடைய தலையில் நெய்யைப் பெய்தும், அவர் கைகளைப் பின்புறமாக வைத்துக் கட்டியும் தன் நாட்டிற்குக் கொண்டு வந்தவன். அவர்களுடைய அணிகலன்களைக் கைப்பற்றியவன். தன் வஞ்சி நகரில் தன் படை மறவர்களுக்கும், அலுவலர்க்கும் குடிகட்கும் அவற்றைத் தந்தவன். வேற்று நாட்டவர்க்கும் அளித்தவன். இவன் தன்னைப் பகைத்த அரசரைக் கொன்றொழித்தவன். பகைவர்க்கு அச்சத்தைத் தருபவன். இத்தகைய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பத்துப்பாட்டுக்களால் புகழ்ந்து பாடினார்.

இத்தகு கருத்து வளம் மிக்க இரண்டாம் பத்தின் பதிகம் இதோ…

பாடல் :

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைரவரல் அருவி இமையம் விற்பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

நயனில் வன்சொல் யவனர் பிணித்து

நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு

பெருவிரல் முதூர்த்தந்து பிறர்க்குதவி

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்

 

இயமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடினார். பதிற்றுப் பத்து இரண்டாம் பத்தில் பதிகம் விளக்கிய தலைப்புகள்:             1. புண்ணுமிழ் குருதி, 2. மறம் வீங்கு புகழ், 3. பூத்த நெய்தல், 4. சான்றோர் மெய்ம்மறை, 5. நிரைய வெள்ளம், 6. துயிலின் பாயல், 7. வலம்படு வியன் பணை, 8. கூந்தல் விறலியர், 9. ஊன்று பைதிறம், 10. அட்டு மலர் மார்பன்,

இரண்டாம் பத்தில் பத்துப்பாடல்களைப் பாடியதற்கான பரிசிலாக, குமட்டூர்க் கண்ணனார், உம்பர் காடு எனும் பகுதி நீக்கிய நிலங்களாக மன்னனிடம் இருந்து கொடையாகப் பெற்றார். அத்துடன் தன்நாட்டில் வரும் அரசுவரி வருவாயிலும் ஒரு பங்கை முப்பத்தெட்டு ஆண்டுகள் பெற்றான். இவ்வூர்களின் அனைத்து உரிமையும் குமட்டூர்க் கண்ணணுக்கே உரியதாகும் என்பது கருத்து.

___________________________________________________________________________________________