Thamizhrivom – Kalithokai 5
___________________________________________________________________________
____________________________________________________________________________________________________
தமிழறிவோம் பகுதியில் கலித்தொகைப் பாடல்கள் சிலவற்றைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் மருதக்கலி பற்றிய ஒரு பாடலைப் பார்ப்போம்.
கணவனோடு மனைவி ஊடல் கொள்ளல். இது ஊடலும், ஊடல் நிமித்தமும் ஆகும். கணவனுடன் காதல் கொண்ட கற்புநிறை மனைவி அவன் வீட்டுக்குக் காலம் கடந்து வரும் போது பொய்க்கோபம் காட்டி ஊடல் கொள்ளல். கணவன் சமாதானம் செய்தல். இது வயலும், வயல்சார்ந்த மருத நிலத்திலும் நிகழ்வது. பொதுமக்கள் (பரத்தை) வீட்டுக்குச் சென்று வரும் தலைவனிடம் ஊடல் கொள்ளலும் நிகழும்.
மருதக்கலி பாடல் : 87
நெஞ்சுடன் கூறி ஊடல் தீர்ந்தாள் எனப் பொருள்தரும் பாடலின் கருத்து
துறைவிளக்கம்
பரத்தையர் சேரிக்குத் தலைவன் சென்று விட்டு மீண்டும் தலைவியிடம் தன் தவறை அவள் அறியமாட்டாள் என எண்ணிச் செல்லல். அவள் அவனிடம் ஊடல் கொள்ளல். மாறுபட்டுப் பேசல். பின் தோழியிடம் கூறுவது தன் நெஞ்சிற்குக் கூறி ஊடல் நீங்கல்.
அப்பாடலின் கருத்து கீழ் வருமாறு:
1-2
“யாம் உன்னைக் காணும் போது அஞ்சுகிறோம். எம் கூந்தலை ஒன்றும் தொட வேண்டா. நீ விலகிப் போ” எனக் கூறுகிறாள் தலைவி.
3-4
அதைக் கேட்ட தலைவன் பின் வருமாறு அவளைப் பாராட்டுகிறான் பாருங்கள்: “ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அணிந்த அணிகலன்களை உடையவளே. நான் தவறு செய்யவில்லை. அப்படி இருக்கும் போது நீ கோபம் கொள்ளலாமோ?” என்கிறான்.
5-8
உடனே தலைவி, உன் கண்ணை மறைத்த இமைக்குள் நான் தெரிந்து மறைந்த போதே நீ என் கண் இமைக்குள் தோன்றாமல் போகின்றாய். ஆதலால் என்னால் நீ கைவிடப்பெறும் நிலையை அடைந்து விட்டாய். அதனை நான் அறிந்திருப்பினும் அறியாதார் போல் உன்னை நொந்து உன்னிடம் ஊடல் கொள்பவர் தவறுடையவர். (அதாவது நான் தவறுடையவள்.) உனக்கு ஒரு தவறும் உண்டோ என ஊடிக் கோபம் கொண்டாள்.
9-10
உடனே அதைக்கேட்ட தலைவன் அணை (மெத்தை போல மெத்தென்ற) போல தோளைப் போன்றவளே. தீய மக்களைத் தண்டிப்பது போல், என்னை வருத்துகின்றாய்.கோபம் கொள்கின்றாய். நான் கோபம் கொள்வதற்குக் காரணமான தவறுடையவன் இல்லை” என மறுமொழி கூறினான்.
11-13
அதைக் கேட்ட தோழி தலைவியிடம் “மான் போன்ற பார்வை உடையவளே. நீ அழும்படி உன்னைக் கைவிட்டவன் பரத்தை ஒழுக்கத்திற்கு நாணவில்லை. மேலும் அவனுக்குத் துன்பம் தந்து நீ ஊடல் கொள்வது பயன் தராது. அவனை ஏற்றுக் கொள்” எனக் கூறித் தேற்றுகிறாள்.
14-15
அதைக் கேட்ட தலைவி தன் நெஞ்சிடம் பின் வருமாறு கூறி ஊடல் தணிகிறாள். “ஏ… நெஞ்சே… தலைவனை நினைந்து நினைந்து என் கண்கள் கண்ணீர் சிந்தி உறக்கம் கொள்ளாமல் தவிக்கின்றன. ஆனால் தோழி அவன் தவறை மறந்து உன் கண்களை உறங்கச் செய் என்கிறாள். சரி அவள் கூறுவதை நெஞ்சே கொஞ்சம் நினைத்துப் பார்” என நெஞ்சுக்குக் கூறி ஊடல் தணிந்தாள்.
தலைவன்பால் ஊடல் கொண்ட தலைவி முதலில் மாறுபாடாய்ப் பேசி ஊடல் கொண்டு பின் தணிந்து, ஊடல் நீங்கி அவனை ஏற்றுக் கொள்கிறாள். “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, தொடரும் நினைவுகள் தொடரட்டுமே. அமைதி என் நெஞ்சில் நிலவட்டுமே” எனும் கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.
நீ வீடு பெற்றாய் : நீ சான்றோர் ஒழுக்கத்தின்றும் நீங்கி விட்டாய் எனத் தலைவனின் கற்பொழுக்கத்தைச் சாடுகிறாள் தலைவி.
இனி, இந்த விளக்கத்துக்குரிய பாடலைக் காண்போம்:
1-5
ஒரூஉநீ; எம் கூந்தல் கொள்ளல்யாம் நின்னை
வேரூஉதும், காணுங்கடை
தெரியிழாய்! செய்த தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்
மெய்பிரிந்து அன்னவர் மாட்டு
ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்
6-10
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
நிலைப்பால் அறியினும், நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையவர் தவறு
அணைத்தோளாய்! தியாரைப் போல, திறன் இற்று உடல்உறுதி
காயும் தவறிலேன் யான்
11-15
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாணிலன் ஆயின், நலி தந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ, இனி
இனியாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே! பனி ஆனாப்
பாடு இல் கண் பாயல்கொள்.
இங்கே தலைவனை “ஏடா, நினக்குத் தவறுண்டோ? நீ வீடு பெற்றாய்” என்ற இந்த வரி, ஒழுக்கமற்ற ஆண்களைச் சாடும் அற்புத வரி. கலித்தொகைப் பாடல்கள் அனைத்தும் படித்துச் சுவைக்க வேண்டிய கற்கண்டுக் கவிதைகள். அறிமுகம் மட்டுமே செய்கிறேன். அறிந்து சுவையுங்கள். தொடர்ந்து தமிழறிவோம்.
____________________________________________________________________________________________________