தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

Thamizhrivom – Kalithokai 7

___________________________________________________________________________

meyyandavan 4பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  தவத்திரு மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களை படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

____________________________________________________________________________________________________

நெய்தற்கலி : பாடல் 133

 

கடலும் கடல் சார்ந்த இடத்தில் வாழும் பரதவ மக்களைப் பாடும் பகுதி இது. நெய்தற்கலியில் 133 வது பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறும் செய்திகள் நீள நினைந்து மகிழத் தக்கவை.

 

துறை விளக்கம்:

 

தலைவன் களவொழுக்கம் உடையவனாய்த் (திருட்டுத் தனமாய்க் காதலனும் காதலியும் சந்திக்கும் சந்திப்பு)

 

தலைவியை மணக்காமல் காலம் கடத்தி வந்தான் தலைவன். தலைவியின் தோழி, தலைவனை நல்வழிப் படுத்த, உலகியல் நெறிகளைக் கூறி மணந்து கொண்டு தலைவிக்கு மகிழ்ச்சி கொடு என வற்புறுத்தல்.

 

இரங்கலும், இரங்கல் நிமித்தமும் தலைவன், தன்னைத் திருமணம் புரியாது காலம் கடத்துவதால் தலைவி ஏங்கி இளைத்து வருந்தும் இரங்கத்தக்க நிலையில் இருக்கும் ஒழுக்கம், தலைவியின் பெற்றோர் மணத்திற்கு உடன்படல், தலைவனும் உடன்படல். ஆயினும் காலம் கடத்தல், அதனால் தலைவியின் பெற்றோர் மணத்திற்கு உடன்படல். ஆயினும் காலம் கடத்தல், அதனால் தலைவியின் இரங்கிய நிலையில் தோழி தலைவனுக்குக் கூறும் அறிவுரையும் ஆகும்.

 

தெளிவுரை:

 

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லை மரமும் செறிந்து வளர்ந்திருக்கும் கடற்கரைச் சோலை, அதில் மணல் மேடு. அங்கு தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர, தாம் முன்பு வைத்திருந்த குண்டிகைச் செம்பு போல், தாழை (தாழம்பூ மடல்) யின் பழம் தொங்குகிறது. அத்தாழையின் மலர், மலர்ந்தாற் போல் குருகு எனும் பறவை இனம் (நாரை போன்ற பறவை இனம் அங்கு தங்குகிறது). அத்தகைய கடற்கரைத் துறையை உடைய தலைவன்.

 

neitharkali - 7இல்வாழ்வு நடத்துதல் வறியவர்களுக்கு ஏதேனும் உதவுதலுக்கே ஆகும். ஒன்றைப் பாதுகாத்தல் எனச் சொல்லப்படுவது நட்புடையவரைப் பிரியாதிருத்தல் ஆகும். மக்கள் பண்பு என்பது பண்புடையோர் நடந்து கொள்ளும் முறையில் நடந்து கொள்வது. அவர்களை வெறுக்காமல் விரும்பி வாழ்வது, அறிவு எனப்படுவது தம்மை விடத் தாழ்ந்தோர் கூறும் அறிவற்ற சொற்களைப் பொறுத்துக் கொள்வது. நட்பு எனப்படுவது நண்பர்கள் கூறுவதை மறுக்காது செய்தல். நிறை எனப் படுவது மறை பொருளைப் பிறர் அறியாது பாதுகாத்தல். இதையே பிற்கால ஔவை “உடையது விளம்பேல்” என ஒரு வரியில் கூறினார். நீதிமுறை என்று சொல்லப்படுவது நடுவு நிலையோடு தீர்ப்பு வழங்கல். “மனுநீதிச் சோழன், தன் புதல்வன் வீதிவிடங்கன், ஆவின் கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன் என்றும் பாராது புதல்வனையே கொல்லுதல். இதுவே கண்ணோடாது உயிர் வௌவல் ஆகும். பொறுமை எனக் கூறப் பெறுவது தம்மைப் பழித்தவர்களையும், போற்றாதவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல். இவ்வாறு வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவையென நன்கு சிந்தித்து விதிமுறைகளைக் கூறுகிறான் சோழன் நல்லுருத்திரன். இச்செய்திகளைக் கூறித் தோழி தலைவனிடம் அவற்றை (மேற்கூறிய அறங்களை) நீ அறிந்து கொள்வாயானால் அந்த ஒழுக்கத்திற்கு ஏற்ற ஒரு செய்தி கூறுகிறேன். நெய்தல் நிலத் தலைவனே, என் தோழியின் நல்ல நெற்றியின் நலத்தை அனுபவித்து (நெற்றியில் முத்தமிடும் நாகரிகம் இது) அவளைக் கைவிடல், இனிய பாலை உண்பவர், பாலை உண்டு அதனைக் கொண்டிருக்கும் கலத்தைக் கவிழ்த்து விடுதல் போன்றதில்லை. ஆதலால், உன்னால் வருத்தப்பட்டவள் துன்பத்தை, அவளை மணம் செய்து கொண்டு போக்குவாயாக. அங்ஙனம் தலைவியின்  துன்பத்தைப் போக்க நின்தேர் குதிரையைப் பூட்டிக் கொள்வாயகா எனத் தெளிவு படுத்தித் தலைவனைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாள்.

 

அப்பாடல் இதோ…

 

பாடல் 133 – நெய்தற்கலிsanka ilakkiyam11.6

 

தலைவியை மணக்கும்படி, தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறல்:

 

 

மாமலர் முண்டகம் தில்லையொடு ஒருங்குடன்

கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த

நீர்மலி கரகம்போல் பழம் தூங்கு முடத்தாழைப்

பூமலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ, கேள் – 5

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

“போற்றுதல்” என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

“பண்பு” எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

“அன்பு” எனப்படுவது தன்கிளை  செறாஅமை,

“அறிவு” எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – 10

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

“நிறை” எனப்படுவது மறை பிறரறியாமை

“முறை” எனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்

“பொறை” எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

ஆங்கு அதை அறிந்தனர் ஆயின் என் தோழி – 15

நல்நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க

தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல்

நின்தலை வருந்தியால் துயரம்

சென்றனை களைமோ பூண்க நின்தேரே -19

 

 

 இப்பாடலுடன் கவின்மிகு காட்சிகளில் ஒரு சிலவற்றை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

கலித்தொகையின் உள்ளே அகப்பாட்டுச் செய்திகள் யாவும், அறப்பாட்டுச் செய்திகள் என்பதை அறிந்தோம். இதுவரை அகப்புறப் பாட்டாம் பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய அக நூல்களில், அகத்திணையாம் காதல் செய்திகளையும் (களவியல்) இல்லறம் என்னும் இன்பம் நல்கும் இனிய செய்திகளையும் கண்டோம். கலித்தொகை முழுதும் படிக்க வேண்டிய சமுதாயப் பண்பாட்டுக் கருவூலம் படியுங்கள். மனம் களியுங்கள். இனி அடுத்துப் புறநூல்களாகிய பதிற்றுப்பத்தையும், புறநானூற்றையும் பற்றிக் காண்போம்.

 

– தொடர்ந்து அறிவோம்

 

___________________________________________________________________________________________

அரசியல் பேசுவோம் – 4 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

அரசியல் பேசுவோம் – 5 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Recent Posts