
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இன்று (11.07.2022) தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்ததினத்தை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் மாண்புமிகு ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசும் போது :
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 60 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு துறவியாக வாழ்ந்து,ஆன்மீகம்,அறிவொளி,தமிழ்மொழி என மூன்றுக்கும் பாதுகாவலராக இருந்தவர். தமிழுக்கு தொண்டாற்றிய அடிகளாருக்கு மணி மண்டபம் கட்டி திருவுருவச் சிலை அமைத்து அவரது புகழைக் கொண்டாடினார் கலைஞர். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஒவ்வொரு பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டு பெருமை சேர்த்தார் கலைஞர் என்றார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்தநாள் விழா இன்று அவரது மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழா காலையில் 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னையில் வீரன் அழகு முத்துக்கோன் அரசு விழாவில் பங்கேற்று வர காலதாமதம் ஆனதால் திட்டமிட்டபடி முதலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் மாண்புமிகு ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப, மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார்,காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி,உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாச்சியர் பிரபாகரன், திருப்பத்துார் ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி,திருப்பத்துார் வட்டாச்சியர் வெங்கடேஸ்வரன்,கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் நாராயணன்,குன்றக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலு மங்கை, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்