வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: மாலை இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு  குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு  சுமார் 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The last rites of  Atal Bihari Vajpayee will take place at 4 pm today at Rashtriya Smriti Sthal in Delhi