
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் திருவிழா வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது.
கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக களை கட்டி உள்ளது ஒலிம்பிக் தொடக்க விழா.

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்தனர்.
இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் சுமார் 1000 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்ந்து விழாவை கண்டுகளிக்கின்றனர்.

ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
The #Tokyo2020 #Olympics opening ceremony has kicked off with a fireworks display