தேனி பென்னிகுயிக் மைதானத்தில் அரசு பொருட்காட்சி : துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி பென்னிகுயிக் மைதானத்தில் 22.12.2018 அன்று அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 27 அரங்குகளையும், அரசு சார்ந்த நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 6 அரங்குகளையும் துவக்கி வைத்து,

முக்கிய பிரமுகர்களை கவுரவித்து, 16 அரசுத்துறைகளின் சார்பில் 569 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை கேட்பதைவிட, பார்ப்பது மக்கள் மனதில் எளிதில் பதியும் என்பதால் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தான் முதன்முதலாக அரசு பொருட்காட்சி 6.8.1978 அன்று சேலத்தில் நடத்த ஆணையிடப்பட்டு, நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 198 அரசு பொருட்காட்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

199-வது அரசு பொருட்காட்சி 13.12.2018 அன்று திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

இங்கு முதல் முறையாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த அரசு பொருட்காட்சி தமிழ்நாடு அளவில் 200-வது அரசு பொருட்காட்சி என்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.

இதுவரை நடைபெற்று, நிறைவடைந்த 198 அரசு பொருட்காட்சிகளின் வாயிலாக அரசிற்கு 38 கோடியே 93 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிகர வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அரசு பொருட்காட்சிகளில் முன்னர் 15 அரசுத்துறைகள் தான் பங்கேற்றன. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேலும் 12 அரசுத் துறைகள் பங்குபெற ஆணையிட்டதன் விளைவாக, தற்போது 27 அரசுத் துறைகள் அரசு பொருட்காட்சியில் பங்கேற்று சிறப்பிக்கின்றன.

அரசு பொருட்காட்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு அரசு துறைக்கும் அரங்கு அமைப்பதற்கு வழங்கப்பட்டு வந்த நிதியான ரூ.66 ஆயிரத்தை உயர்த்த ஆணையிடப்பட்டு, ரூபாய் 70 ஆயிரமாக 12.04.2017 முதல் வழங்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்,

தமிழ்நாடு கிராம கைத்தொழில் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, தேனி நகராட்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், போன்ற அரசு சார்பு நிறுவனங்களும் அரசு பொருட்காட்சியில் பங்கேற்கின்றன.

இப்பொருட்காட்சி 4.2.2019 வரை நடை பெறவுள்ளது.

தமிழ்நாட்டில், ஆண்டுதோறும் 10 அரசு பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
அரசிற்கு வருவாய் ஈட்டுகின்ற வகையிலும், அனைத்து மாவட்ட பொதுமக்களும் பயன்பெறுகின்ற வகையிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் பேரில்

கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஏனைய மாவட்ட மக்களும் பயன்பெறுகின்ற வகையில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் 4 மாவட்டங்களில் அரசு பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, புதுடெல்லியில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில்,

பொங்கல் விழாவினை சித்திரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அகில இந்திய அளவில் இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கு தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் “தோடர்கள்” என்ற மலைவாழ் பழங்குடி இனத்தினரை குறிக்கும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு, பங்கேற்கப்பட்டது.

2017ஆம் ஆண்டின் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்ப்பேரணி விழாவில் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில்

தமிழ்நாடு அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறை தொடர்ந்து பங்கேற்று வருகிறது. 2012, 2013, 2014, 2015, 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற மலர் பேரணி விழாக்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்று முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கடந்த நவம்பர் 2018-ல் புதுடெல்லியில் நடத்தப்பட்ட இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்க்காட்சி 2018-ல்

தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கிற்கு சிறந்த முறையில் அரங்கம் அமைத்ததற்காக பாராட்டுச் சான்றிதழை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு அரங்கிற்கு வழங்கியது.

புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடன் நடைபெற்றுவரும் இந்த அரசால், நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை வளம்பெறும் வகையில், 2018-19-ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கையின் போது,

அரசு பொருட்காட்சியில் நடத்தப்படும் விழிப்புணர்வு நாடகங்களுக்கான மதிப்பூதியம், தொடர் செலவினமாக, ரூ.2000-லிருந்து ரூ.5000-மாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது இந்த உயர்த்தப்பட்ட மதிப்பூதியம் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பொருட்காட்சிப்பிரிவின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சிகளில், அம்மா நல்லாசியுடன் நடைபெறும்

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொருட்காட்சி பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் பொதுமக்களுக்கு எளிதில் விளக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட மக்கள் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த அரங்குகளை பார்வையிட்டு, அதனை பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.