“தென்புலத்தாரும் நடுகற்களும்” : முனைவர் சிவ இளங்கோ..

“தென்புலத்தாரும் நடுகற்களும்”
இயற்கைச் சீற்றங்களான இடி, மழை, வெள்ளம், பெருங்காற்று, விலங்குகள், பூச்சிகள், இருட்டு என மனிதனின் பயம் நீண்டு கொண்டே போக, அந்த பயத்தைப் போக்க, அவைகளையே வணங்கும் முறைதான் உலகமெங்கும் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல முன்னோர் (மூதாதையர்) வழிபாடு என்பதும் உலகத்தின் அனைத்து இனக் குழுக்களிடமும் இருந்திருக்கிறது. இதுதான் பின்னர் இறை வழிபாடாக மாறியிருக்கிறது என்பதை வரலாறின் தொடர்ச்சியாகக் காண முடிகிறது.

அதாவது காப்போனாக இருந்தவன் நினைவில் வாழும் போது இறையாகிறார். தமிழ்ச் சமூகத்திலும் இதுவே நிகழ்ந்திருக்கிறது. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் (சுற்றத்தார்), தான் என்று வரிசைப் படுத்துதலில், ‘தென்புலத்தார்தான் தெய்வம் ஆகிறார்’ என்பதை இல்வாழ்க்கையின் அறமாக்குகிறார் திருவள்ளுவர் (குறள்: 43).

தமிழ்ச் சமூகத்தில் தென்புலத்தாருக்கு அடுத்த நிலையிலான வழிபாடு, இனக்குழுத் தலைவனுக்கு நிகழ்ந்திருக்கிறது. அவன் வேட்டைக்குச் சென்று வெற்றியோடு திருப்பினால் குழுவினர்க்கெல்லாம் கொண்டாட்டம்தான். தலைவனோடு சென்று வெற்றியோடு திரும்புபவர்கள் அனைவருமே வேலன்தான்.

அவர்கள் கையில் இருப்பது வேல் வடிவத்தில் உள்ள கற்கோடரி. தமிழ்நாட்டில் கற்கோடரியின் தொடர் பயன்பாடு இருந்திருக்கிறது. சேர்வராயன் மலைப்பகுதிகளில் உழவு செய்யும்போது கிடைத்த கற்காலக் கோடரிகளை, இடியாக மண்ணில் விழுந்தவை என்று எண்ணி மரத்தடிக் கோவில்களில் வைத்துத் தெய்வீகக் கல்லாக இன்றும் வணங்கி வருகின்றனர். பல ஊர்களிலும், கிராமங்களிலும் இதே போல் கற்காலக் கோடரிகளை வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வருவதை வரலாற்று ஆர்வலர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

கற்களைத் தேய்த்து உருவாக்கப்பட்ட கோடரிகளைப் பார்க்க வேல் வடிவத்தில் காணப்படும். அதனுடன் ஒரு மரக்கிளை அல்லது மூங்கில் வைத்துக் கட்டினால் அதுதான் வேல் ஆயுதம். இந்த வேல் ஆயுதத்தைப் பயன்படுத்தி, வேட்டையில் வெற்றி பெறும் வேலனையும், இனக்குழுக்களைக் காக்கப் போரிட்டுச் சண்டைகளில் உயிரிழந்த வேலனையும் வணங்கி, நன்றி தெரிவிக்கும் முறைதான் ‘வேலன் வெறியாட்டம்’ என்பது.
இந்த வேலன் வெறியாட்டம், இனத்தையும், சேர்ந்து வாழும் சேரிகளையும் காக்கும் வீரர்களுக்காக நடத்தப்படும் ஒழுகலாறாக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவர்கள் உயிர்த்தியாகம் செய்தால் நடுகற்களில் அவர்கள் உருவம் பொறித்து வணங்கப்படும். அவர்கள் கையில் இருந்த ஆயுதம்தான் வேல் வடிவம் கொண்ட கற்கோடரியின் நீட்சியாக இருந்திருக்கிறது.

உருவ வழிபாட்டின் தொடக்கமாக இந்தக் கற்கோடரிகள் (வேல்) இருந்திருக்கலாம். குறிஞ்சி நிலத் தலைவனான இந்த வேலனைத்தான் சேயோன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சேயோன் என்பதில் சேய் என்ற பதமும், பொருளும் இருப்பதை வைத்து, வேலனைக் குழந்தையாகவும் பாவிக்கும் விதத்தில் குமரன், முருகன் என்றும் அழைக்கப்பட்ட குறிஞ்சி நிலக் கடவுள்தான் சேயோன். ஆனால் சிலர் சேயோன் என்பதைச் சிவந்த நிறத்தவன் என்பதாகப் பொருள் கொண்டு, பிற்காலத்தில் சிவன் என்ற உருவகத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

இப்படி நடுகல் தெய்வமாக வாழ்ந்த இனக்குழுத் தலைவர்கள்தான் திணைத் தெய்வங்களாக வைக்கப்பட்டுள்ளனர். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளுக்கு மட்டுமே தெய்வங்களைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர் (பொருள்: நூற்பா: 951). அதையும் தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் முதற்பொருள், உரிப்பொருள்களை அடுத்து மூன்றாவதான கருப்பொருளில் தான் தெய்வத்தைக் கொண்டு வந்து வைக்கிறார் தொல்காப்பியர் (பொருள்: நூற்பா: 964).

தெய்வம் என்ற பொருளைத் தமிழர்கள் வைத்த வைப்பு முறை இதுதான். இதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் இல்லை. இதற்கு மேலும் கடவுள் எதுவும் இல்லை. அதாவது தமிழர் வாழ்வியலில், பண்பாட்டில் முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடுகளைத் தவிர்த்து வேறு கடவுள்கள் ஏதும் இல்லை. இதைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். புறநானூற்றுப் புலவர் மாங்குடி கிழார் இப்படிக் கூறுகிறார்.
“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”

என்பது எட்டுத்தொகை நூலான புறநானூறில், மாங்குடி கிழாரின் பாடல் (355).
அதாவது பகைவருடனான போரில் முன் நின்று போரிட்டு, ஒளி மிகுந்த தந்தத்தை உடைய யானை மீது வேல் எறிந்து வீழ்ந்தவனுக்கு, நடுகல் வைத்து, அதன் மீது நெல் தூவி வணங்கும் முறையைத் தவிர்த்து வேறு “கடவுள் ஏதும் இல்லை” என்கிறார் புறநானூற்றுப் புலவர்.
“ஆதிகாலத்தில் பகுத்தறிவுச் சமூகம்; நிகழ்காலத்தில் மூடநம்பிக்கைச் சமூகம்”.

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
முகநுால் பதிவு

காரைக்குடியில் காங்..வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்…

தமிழகம்,புதுவையில் மக்களவைத் தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று மாலை முடிவுகிறது…

Recent Posts