There is no GST cut on cement and auto parts: Arun Jaitley
சிமென்ட், ஆட்டோ மொபைல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில், திரையரங்க கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
ஜிஎஸ்டி கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ஜெட்லி கூறியதாவது:
34 வகையான ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. கணிணி, தொலைக்காட்சித் திரை, டயர்கள், பவர் பேங்க் 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சிமென்ட், மற்றும் ஆட்டோ மொபைல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை.
23 பொருட்கள் 28 சதவீத வரி வரம்பில் இருந்து 18 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, 33 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி, 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.