மாற்றங்களை மக்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம்: ஜெட்லி பங்கேற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சுருக்

மாற்றம் என்ற பெயரில் மக்கள் மீது எதையும் வலிந்து திணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தி இந்து பிசினஸ் லைன் சேஞ்ச் மேக்கர் விருது (The Hindu BusinessLine Changemakers Awards) வழங்கும் விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடம் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மன்மோகன் சிங் மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நியாயமான முறையில், ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாமல் புதுமையான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. இத்தகைய முடிவுகளை செயல்படுத்துவதற்கான ஜனநாயக வழிமுறைகளை நாம் பெற்றிருக்கிறோம். அதில், எந்த ஒரு முடிவையும் மக்கள் மீது திணிப்பதற்கான இடமே இல்லை. ஒரு வேளை அவ்வாறு எளிய மக்களைப் பாதிக்கக் கூடிய கடுமையான முடிவுகளை எடுத்தால், அதற்கு நாட்டின் தலைவர்களே பொறுப்பாக வேண்டும்.

அந்த மாற்றத்தின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கி, அவர்களை ஏற்க வைக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமையாகும். ஆனால், புதுமைத் திட்டங்களால் ஏற்படும் இழப்பு தற்காலிகமானதாக இருப்பினும் கூட, அதனை மக்கள் ஏற்குமாறு செய்வது அத்தனை எளிதல்ல. கொள்கை முடிவுகள் என்பவை, நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் பட்சத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.  அத்தகைய முடிவுகள், மக்களுக்கும், அரசுக்கும் இடையே பரஸ்பரம் எளிதில் பரிமாறிக் கொள்ளத் தக்க வகையிலும் இருக்க வேண்டும்.

இதனிடையே, வர்த்தகத்துறையை சேர்ந்தவர்கள் மீது எதிர்மறையான உணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போக்கு, உள்நாட்டு வர்த்தக உலகினருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு அரசுகள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் நம்மைப் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தும்.  சில்லறைத்தனமான அதிகாரிகளால், நேர்மையான தொழில்துறையினர் மற்றும் தொழில் முனைவோர் அச்சுறுத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. துரதிர்ஷ்ட வசமாக அரசுக்கும் வர்த்தகத்துறையினருக்கும் இடையேயான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அருண் ஜெட்லி, எந்த ஒரு மாற்றத்திற்கான முயற்சியும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியதாகத்தான் இருக்கும் எனக் கூறினார். மேலும், வரும் காலங்களில் கிராமப்புற மேம்பாடு, பாதுகாப்புத்துறைக் கான ஆயுதக் கொள்முதல், சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டியதிருக்கும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.

மக்களவையில் செயல்படாத தமிழக எம்.பிக்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் …

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு.

Recent Posts