கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

 

 

கோமதிகளுக்கு

ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை

முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை

மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே

மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது அது .

அவர்களுக்கான ஒரே ஒரு பிரச்சினை

வாய்ப்பு கிடைப்பது மட்டும்தான்

அது மட்டும் கிடைத்து விட்டால்

தங்கத்தையும் , வெள்ளியையும் தட்டிப் பறித்து வந்து

நாம் தப்பாகப் பாடிக் கொண்டிருக்கும்

தேசிய கீதத்தின் காலடியில் சமர்ப்பித்து விடுவார்கள்

கோமதிகள் போட்டிகளுக்காக ஓட ஆரம்பித்தவர்களல்ல…

 

அவர்களை …

பசி துரத்துகிறது

ஊட்டச்சத்துக் குறைபாடு துரத்துகிறது

தந்தையின் இயலாமை துரத்துகிறது 

தாயின் பயம் துரத்துகிறது

ஆசிரியர்களின் கேலி துரத்துகிறது

ஊராரின் அவநம்பிக்கை துரத்துகிறது

சாதி துரத்துகிறது

ஆண்திமிர் துரத்துகிறது

சமூகத்தின் பாரபட்சம் துரத்துகிறது 

ஊடகங்களின் புறக்கணிப்பு துரத்துகிறது

பயிற்சியாளர்களின் அலட்சியம் துரத்துகிறது 

தேர்வுக் குழுவின் அரசியல் துரத்துகிறது 

வெள்ளை நிறத்தைத் தரமுடியாத மரபணு துரத்துகிறது 

நம்பிக்கை அளிக்க முடியாத எதிர்காலம் துரத்துகிறது

 

கோமதிகள் ஓடுகிறார்கள்….

விழுந்து விடக் கூடாது என்பதற்காக ஓடுகிறார்கள்…

நின்று விட்டால் அழுது விடுவோம் என்பதற்காக ஓடுகிறார்கள்….

ஓடுவதைத் தவிர வேறு வழியே இல்லாததால் ஓடுகிறார்கள்….

ஓட்டம் நின்று விட்டால் மூச்சும் நின்று விடுமோ

என்கிற பயத்தில் ஓடுகிறார்கள்…

தான் சந்தித்த அவமதிப்புகளை

புறக்கணிப்புகளை மைதானமாக விரித்து

அவற்றைக் கால்களால் மிதிக்கிற கற்பனையில் ஓடுகிறார்கள்…

ஓடி முடித்த பின் பருகக் கிடைக்கும் பழச்சாறிலோ

நீரிலோ துளியளவு கருணை இருந்து விடாதா ?

என்கிற எதிர்பார்ப்பில் ஓடுகிறார்கள்

 

எல்லைக் கோட்டைத் தொட்ட போது

தமிழகமும், இந்தியாவும், உலகமும் என்ன நினைத்ததோ ?

கோமதி இப்படித்தான் நினைத்திருப்பாள்

 ‘ இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை’

கோமதிக்குக் கிடைத்திருப்பது தங்கம் அல்ல

இனி ஒருபோதும் தகர்க்கவே முடியாத தன்னம்பிக்கை

நம் வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில் இருக்கும் கோமதிகளுக்கு

நம்மாலும் அதைத் தரமுடியும்

அதுதான் கோமதிக்கான நிஜமான கைதட்டல்

வாழ்த்துகள் மகளே 

 

 

ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..

காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

Recent Posts