திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை,
உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது.
இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார்.
பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். அதன்பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்தார்.
இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள் செய்தார்.
ஒவ்வொரு உருவமாக மாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. கடல் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டன.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன.
தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்களும் இயக்கப்பட்டன.
சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
இன்று இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.