முக்கிய செய்திகள்

திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் : ஜவாஹிருல்லா கோரிக்கை..


“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்யவேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைப்பிடித்து அன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நானும் பங்குக் கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வி.சிகவின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்துக் கோவில்களை இடிக்க வேண்டும் என்று எவ்வகையிலும் குறிப்பிடவில்லை. தர்க்க ரீதியாக ஒரு வழிப்பாட்டுத் தலம் முன்பு வேறு மதத்தின் வழிப்பாட்டுதலமாக இருந்தது என்று எடுத்துக் கொண்டால் நாட்டில் எந்தவொரு வழிப்பாட்டுத் தலமும் மிஞ்சாது என்று வரலாற்று உண்மைகளைத் தான் திருமாவளவன் எடுத்துரைத்தார். ஆனால் இந்த உரையை சில ஊடகங்கள் கோவில்களை இடித்து விட்டு பவுத்த விகார்களை கட்ட வேண்டும் என திருமாவளவன் பேசியதாக திரித்துச் செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்தத் திரிப்பு செய்தி வெளிவந்தததை தொடர்ந்து திருமாவளவன் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அளிக்கப்படும் என திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த சிந்தனைப் பயங்கரவாதி ஒருவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சங்பரிவரைச் சேர்ந்தவர்கள் சகோதரர் திருமாவளவன் மீது மிக அருவெறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறையிலும் கரூரிலும் நடைபெற்றது போல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என பேசி பா.ஜ.க தலைவர் எச். ராஜா வன்முறையை தூண்டியுள்ளார்.

பல்வேறு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் பவுத்த மற்றும் சமணக் கோவில்களை இடித்து கோயில்கள் கட்டப்பட்டிருந்தாலும், அக்கோயில்களை இடித்துவிட்டு மீண்டும் சமண அல்லது பவுத்த கோயில்களை அமைப்பது மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எந்த அமைப்பும் ஏற்கொள்ளாது. அதேபோல் திருமாளவளவனும், அவர் சார்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோயில்களை இடித்து அதற்கு பதிலாக வேறு ஒரு வழிபாட்டு தலத்தை கட்டுவதை ஏற்கொள்ளக்கூடியவர்கள் அல்ல. இதற்கு சான்றாக ஈழத்தில் இந்து கோயில்களை இடித்து விட்டு புத்த விகார்களை சிங்கள பேரினவாதிகள் எழுப்புவதை கடுமமையாக எதிர்த்தவர் சகோதரர் திருமாவளவன் என்பதை மறந்து விடக் கூடாது.

இதுவரை வடஇந்தியாவில் சங்பரிவார அமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு வந்த காட்டுமிரண்டித்தனமாக அறிவிப்பான தலைக்கு, மூக்குக்கு லட்சங்கள், கோடி என்ற பரிசு தற்போது தமிழகத்திலும் ஊடுருவி உள்ளது. இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணத்திற்கும், சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை உடனே கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.