நீரடித்து நீர் விலகாது: திருமா சந்திப்பின் பின்னர் வைகோ நெகிழ்ச்சி

திருமாவளவனுடன் ஏற்பட்ட சிறிய நெருடல் நீங்கி விட்டதாகவும், நீரடித்து நீர் விலகுவதில்லை எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கம் –  தலித் முன்னேற்றம் தொடர்பான கருத்துகளால் எழுந்த சர்ச்சை, மதிமுக – விசிக மோதலாக உருவெடுத்தது. இதனால், மிக நெருக்கமான நட்பைக் கொண்ட வைகோ – திருமாவளவன் இடையே வார்த்தைப் போர் ஏற்படும் அளவுக்கு நிலைமை முற்றி வந்தது. திமுக தலைமையில் உருவாகி வரும் கூட்டணியை உடைப்பதற்காகவே, இதுபோன்ற சதிகள் அரங்கேறுவதாகவும் பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஒத்த கருத்துள்ளவர்களுக்கு இடையேயான மோதலைத் தவிர்க்கும் நோக்கத்துடன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று நேரில் சென்று சந்தித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

திருமா என்னை சந்திப்பது புதுமையானது அல்ல. திருமாவளவனைக் கலைஞரிடம் அறிமுகப்படுத்தி வைத்தவன் நான். திருமாவளவன் அனைத்து சமூக மக்களுக்கான இளம் தலைவராக வளர்ந்து வருபவர். எங்களுக்குள் ஏற்பட்டது சிறிய நெருடல்தான். அது சரியாகி விட்டது. திருமா நன்றாக வரவேண்டும் என நினைப்பவன் நான். நீரடித்து நீர் விலகாது. திருமாவளவன் திராவிட இயக்கத்தின் வார்ப்பு.  திமுக தலைவர் தலைமையில் எங்களது அணி வலுவாக உள்ளது. அதில் யாரும் நெருடலை ஏற்படுத்த முடியாது. காற்றில் யாராலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது. கலைஞர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறும். 20 தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றால் திமுக அணி தான் வெல்லும். அதில் வென்றாலே திமுக பொது தேர்தலை சந்திக்காமலே ஆட்சியைப் பிடித்து விடும். .  

உடன் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், வைகோவுடன் 30 ஆண்டுகாலம் தாம் நட்பு கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் நல்ல மனிதர் வைகோ என்றும் அவர் கூறினார்.