சிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக திருமுருகன் காந்திக்கு கொடுமை இழைக்கப்படுவதாகவும் அதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்,
உடல்நலம் பாதித்த திருமுருகன்காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் அரசை வலியுறுத்துவதாகத் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று(வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு,
சேலம்- படப்பை 8 வழிச் சாலை ஆகியவை பற்றி ஐ.நா. அவையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல வழக்குகளைப் புனைந்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு.
இதில் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தால் திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார்; ஆனால் மீதி வழக்குகளுக்காக 45 நாட்களாக அவர் வேலூர் சிறையில் உள்ளார்.
சிறையில் காந்தி, காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த தனியறையில் அடக்கப்பட்டுள்ளார். அந்த அறையை விட்டு வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அவர் அனுமதிக்கப் படுவதில்லை.
முறையான, சுகாதாரமான உணவு அவருக்கு வழங்கப்படவில்லை; பெரும்பாலும் மதிய உணவே வழங்கப்படுவதில்லை.
வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கிலான இத்தகைய செயல்களால் திருமுருகன் காந்திக்கு வயிற்றுப்போக்கு,
வாந்தி, ரத்த சர்க்கரைக் குறைவு, ரத்த அழுத்தக் குறைவு என உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அவர் மயங்கி விழுந்து கிடந்திருக்கிறார்.
அதைத் தற்செயலாகப் பார்த்த காவல் பணியாளர் ஒருவர் அவரைத் தூக்கித் தோள் மேல் போட்டுக் கொண்டுபோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மருத்துவமனைக்கு திருமுருகன் காந்தி கொண்டுசெல்லப்பட்டது குறித்துஅவரது வீட்டாருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மருத்துவமனையில் இரண்டு நாட்களாவது படுக்கையில் இருக்க வேண்டும் என்று சொன்னார் மருத்துவர். ஆனால் அவரே சிறிது நேரம் கழித்து, வேண்டியதில்லை போகலாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக திருமுருகனை வெளியேற்றியிருக்கிறார்; காரணம், மேலிட அழுத்தம் என்கிறார்கள்.
இதனால் திருமுருகன் காந்தி உடல்நல பாதிப்புடன் தொடர்ந்து அவதிப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்; சிகிச்சை அளிக்காத நிலையில் இந்த உடல் நலிவு நோயாக வலுப்பெற்று விபரீத விளைவுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் இந்தத் தொல்லை, துன்புறுத்தல்கள் திட்டமிட்டே நடப்பவை என்பதோடு, சிறைச்சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானவை; மனித உரிமை மீறல்கள் இவை.
இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் அரசைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.