திருப்பதியில் வேகமாக பரவும் கரோனா தொற்று : தர்ம தரிசனம் ரத்து…

திருப்பதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டணமின்றி இலவசமாக வழிபாடு நடத்தும் சர்வதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜீயர் சுவாமிகள் இருவர், 20 அர்ச்சகர்கள்,160 தேவஸ்தான ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சில அர்ச்சகர்கள் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழுமலையானுக்கு சேவை செய்து வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகரான ஓய்வுபெற்ற ஸ்ரீநிவாச தீட்சதருக்கு (73), சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் ஆகஸ்ட் 5 வரை மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. காலை 11 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருப்பதியில் டிக்கெட் இன்றி இலவசமாக வழிபாடு நடத்தும் சர்வதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை சோதித்து அவர்களுக்கு தங்குமிடம் போன்றவற்றை ஏற்பாடு செய்வதில் சிக்கல் நிலவுவதால் தற்காலிகமாக சர்வதரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.