திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா : மலை உச்சியில் மகாதீபம் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு பெற்றதும், மூலவர் சந்நிதி முன்பு தங்க கொடிமரத்தில் கடந்த 17-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றது. 7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெற்றது. 23-ம் தேதி காலை தொடங்கி 24-ம் தேதி அதிகாலை வரை 5 திருத்தேர்கள் மாட வீதியுலா வந்தது.

கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று(நவம்பர் 26-ம் தேதி) ஏற்றப்பட்டன. மூலவர் சந்நிதி முன்பு அதிகாலை 3.40 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சார்யார்கள் ஏற்றினர். பின்னர், அந்த தீபத்தை வெளியே கொண்டு, ‘பஞ்சபூதங்களும் பரம்பொருளே, இறைவன் ஒருவனே’ என ஏகன் – அநேகன் தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், 5 விளக்குகளில் ஏற்றப்பட்டன. பின்னர் ஒரு விளக்கில் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை தொடர்ந்து பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.


இதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தீப தரிசன மண்டபத்தில் ஒவ்வொருவராக எழுந்தருளினர். ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மாலை 5.58 மணியளவில், அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுத்தார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும். பின்னர், தங்க கொடிமரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. பருவதராஜ குல சமூகத்தினர் தீபத்தை ஏற்றி வைத்தனர்.

அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர். கோயில் உட்பட நகரம் முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தன. வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபட்டனர். ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி கொடுப்பதால், கோயில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் இன்று இரவு மாட வீதியுலா வந்தனர். பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மோட்ச தீபம் என அழைக்கப்படும் மகா தீபத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து தரிசிக்கலாம். இதற்காக 4,500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படுகிறது. மலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதும், அண்ணாமலையாரை குளிர்விக்கும் வகையில் ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. 27-ம் தேதி இரவு சந்திரசேகரர், 28-ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 29-ம் தேதி இரவு முருகர் ஆகியோரது தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் 28-ம் தேதி கிரிவலம் செல்ல உள்ளார். வெள்ளி ரிஷப வாகனத்தில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

கார்த்திகைத் தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், இன்று அதிகாலை வரை விடிய விடிய கிரிவலம் சென்று சுவாமியை தரிசித்தனர். மகா தீபத்தை தரிசிக்க, மலை மீது ஏறி செல்ல சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. 14 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாத்தப்பட்டு பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:இந்திய வானிலை மையம்…

Recent Posts