திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கம்..

திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை பணிகள் துவங்கின.

ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.

ஒருவழியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 1ம் தேதி முதல், திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த ரயில் சேவையை பெரிதும் எதிர்பார்த்திருந்து காத்திருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அறிவிக்கப்பட்டபடி கடந்த 1ம் தேதி மேற்கண்ட ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை, பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

இரு இடங்களுக்கும் இடையேயான 148 கி.மீ. துரத்தை கடக்க ரயிலில் 10 மணி நேரம் ஆவதே இதற்கு காரணமாகும். திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள 72 ரயில்வே கேட்களில் 25ல் மட்டுமே பணியாளர்கள் உள்ளனர்.

எஞ்சிய 47 கேட்களை மூடுவதற்கு மொபைல் கேட் கீப்பர்கள் எனப்படும் ரயில்வே ஊழியர்கள் ரயிலிலேயே சென்று கேட் உள்ள இடத்தில் கேட்டை மூடுகிறார்கள்.

ரயில் கடந்தவுடன் கேட்டை மீண்டும் திறந்துவிட்டு ரயிலில் ஏறுகின்றனர். கேட் இல்லாத இடங்களில் இருபுறமும் இரும்பு சங்கிலியை பிடித்துக்கொண்டு நிற்பது தான் இவர்கள் பணி.

இதனால், முதல் நாளிலேயே மிக தாமதமானதால் ரயில் சேவைக்கு வரவேற்பு இல்லை.

மேலும் கழிவறை வசதிகள் இல்லாத டெமோ ரயில் என்பதால் இதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ரயில் சேவையை அறிவித்தப்படி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளிளிட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மற்றும் காரைக்குடியில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். மேலும் பயண நேரம் 8 மணி நேரமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

திருவாரூரில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காரைக்குடிக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு,

திருவாரூருக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும். வரு ஆகஸ்ட் 30 வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அமமுக மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது: செல்லூர் ராஜு

Recent Posts