இலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கம் : ஸ்டாலின் கண்டனம்..


இலங்கைளில்“மலையகத் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட செளவுமிய மூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது”என செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை.
மலையக தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட செளவுமிய மூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மலையக தமிழர்களின் வாழ்வு மேம்படுவதற்காக சிலோன் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி, தொடர்ந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்தான் அரசு நிறுவனங்களுக்கு செளவுமிய மூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற்பயிற்சி மையம், தொண்டை மான் கலாச்சார மையம், தொண்டைமான் மைதானம் போன்றவற்றிலிருந்து “தொண்டைமான்” பெயரை நீக்கி, மலையகத் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ள இலங்கை அரசின் நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள இயலாது.
ஏற்கனவே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதிலும், ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதிலும், ஈழ தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்துவதிலும் இலங்கை அரசு முற்றிலும் ஒத்துழைக்க மறுத்து, தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மலையக தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் வகையில் செளவுமிய மூர்த்தி தொண்டை மான் பெயரை நீக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது.
ஆகவே, இலங்கை அரசு உடனடியாக இந்தப் போக்கை கைவிட்டு, பெயர் நீக்கம் செய்யப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மீண்டும் செளவுமிய மூர்த்தி தொண்டை மான் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், அது ஒன்றே மலையக தமிழர்களின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட செளவுமிய மூர்த்தி தொண்டைமானுக்கு இலங்கை அரசு செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.