பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் ஒருவர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஜலந்தர் டயோசீசனுக்கு கீழ் செயல்படும் கத்தோலிக்க தேவாலயத்தில் பிஷப்பாக இருப்பவர் பிரான்கோ முலாக்கல். இவர் மீது கோட்டயம் ‘மிஷனரிஸ் ஆப் ஜீசஸ்’ சபையில் கன்னியாஸ்திரி ஒருவர் அண்மையில் பலாத்கார புகார் அளித்தார். இது, கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலாத்கார புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் மற்றொரு கன்னியாஸ்திரியான அனுபமா என்பவருக்கு கஞ்சிராப்பள்ளி டயோசீசனில் பாதிரியராக இருக்கும் ஜேம்ஸ், தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
அதில், பிஷப் பிரான்கோ முலாக்கல் மீதான பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக பாதிரியார் ஜேம்ஸ் தெரிவிக்கிறார். இல்லையெனில், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் கெடுபிடி நிறைந்த கான்வென்ட்டுகளுக்கு அவர்களை மாற்றிவிடுவதாகவும் அவர் கூறுகிறார்.
எனினும், அவரது மிரட்டலுக்கு பணியாத அனுபமா, என்ன நடந்தாலும் புகாரை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறார். இந்த ஆடியோவானது, பல்வேறு செய்தி ஊடகங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ, வழக்குக்கு கூடுதல் ஆதாரமாக பயன்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.